×

நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி பாதிக்கும் அபாயம்

சேலம்: நூல் விலை உயர்வால் பொங்கல் பண்டிகைக்கான ஜவுளி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவு மற்றும் அது சார்ந்த தொழில்களில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், விருதுநகர், தர்மபுரி உள்பட பத்து மாவட்டங்களில் விசைத்தறிக்கூடங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் விசைத்தறியில் வேஷ்டி, துண்டு, டவல், லுங்கி, கேரளா சேலை, அபூர்வா சேலை, சாமிக்கு அணியும் ஜவுளிகள் வகைகள், ஏற்றுமதி ரகங்களான காட்டன் ஜவுளிகள் உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளில் ஏற்றுமதி ரகமான காட்டன் ஜவுளிகள் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஆஸ்திரேலியா, துபாய் உள்பட பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைதவிர டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் காட்டன் ஜவுளிகள் டவல், லுங்கி, வேஷ்டி உள்பட பல்வேறு ரகங்கள் அனுப்பப்படுகிறது. இதனால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனாவால் விசைத்தறி கூடங்கள் இரண்டு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டது. இதன் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான ஜவுளிகள் விற்காமல் தேக்கமடைந்தது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து போதிய வருமானம் இல்லாமல் தவித்தனர். கடந்த ஜூன் மாதம் முதல் விசைத்தறிக்கூடங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கியது. ஆனால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் தேக்கமடைந்ததால், புதிதாக ஜவுளிகள் உற்பத்தி செய்ய ஜவுளி உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் வரை வெறும் 20 சதவீதம் ஜவுளிகளே உற்பத்தி செய்யப்பட்டது.

இதன்பின்னர் நிலைமை சற்று கட்டுக்குள் வந்ததால் விசைத்தறி கூடங்களில் ஜவுளி உற்பத்தி வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனிடையே தீபாவளி பண்டிகையின்போது, எதிர்பார்த்த விற்பனை இல்லாமல் போனது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜவுளி உற்பத்தியில் நூல் விலை பெரும் சுமையை ஏற்படுத்தி வருகிறது. பருத்தி விலை அதிகரிப்பால் நூல் விலை கடந்த இருபது நாளில் தாறுமாறாக ஏறி உள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இது குறித்து வெண்ணந்தூர் விசைத்தறி சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் விசைத்தறிகளில் ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 5 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டு காலமாக ஜவுளி தொழிலில் அவ்வப்போது ஏற்றம், இறக்கம் இருக்கும். கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனாவால் ஜவுளி தொழிலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

எட்டு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் ஏற்றுமதி ரகமான காட்டன் ஜவுளிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது உள்ளூர் ரகங்களை நம்பியே ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். 75 சதவீதம் பேர் உள்ளூர் ரகங்களில் ஈடுபட்டுள்ளதால், அளவுக்கு அதிகமாக உற்பத்தி நடந்து வருகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளை விற்க முடியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஜவுளி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை உயர்ந்து வருகிறது. இது குறித்து நூல் மில் உற்பத்தியாளர்களிடம் கேட்டால் பருத்தி விலை உயர்ந்ததால் நூல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர். கடந்த இருபது நாட்களுக்கு முன்பு 40 நெம்பர் 50 கிலோ கொண்ட ஒரு பண்டல் ரூ.8,900க்கு விற்றது. நேற்று ரூ.10,200 என உயர்ந்துள்ளது. இருபது நாளில் 50 கிலோவுக்கு ரூ.1300 அதிகரித்துள்ளது. இந்த விலை மேலும் உயரும் என்று மில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் வியாபாரமான டவல், வேஷ்டி, காட்டன் சேலை, லுங்கி உள்பட பல ஜவுளிகளின் விற்பனை களைகட்டும். நூல் விலை அதிகரிப்பால் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஜவுளியை உற்பத்தி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போது விற்கும் விலையில் நூலை வாங்கி ஜவுளி உற்பத்தி செய்தாலும், நஷ்டம் தான் ஏற்படும். இதனால் பலர் ஜவுளி உற்பத்தியை குறைத்துள்ளனர். இவ்வாறு சிங்காரம் கூறினார்.

Tags : Textile production
× RELATED சாலையோரத்தில் வீசிச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்ட திருநங்கை!